Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்த ஆவணம் எங்கள் தேர்தல் வாக்குறுதி அல்ல – இது மக்கள் சார்பானவர்கள் திருகோணமலை மாநகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் எவ்வாறான ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்களுக்கு முன் வைத்திருப்பார்கள் என்ற கேள்விக்கான பதில். உள்ளூராட்சி நிர்வாகத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதன் அர்த்தம் என்ன என்பதைக் காட்ட இதை எழுதினோம்.
அரசியல் மக்களை சுரண்டுவதற்கும் ஏமாற்றுவதற்கும் பதிலாக அவர்களுக்கு சேவை செய்தால்?
நமது நகரம் உண்மையிலேயே மக்களுக்குச் சொந்தமானதாகவிருந்தால்?
அபிவிருத்தி என்கிற சொல்லுக்காக உரிமைக்கான குரலை அடகுவைக்காத பாதையில் நடந்தால்?
மாநகர வளர்ச்சி சுயமரியாதையுடன் தொடங்கினால்?
ஆகிய கேள்விகளுக்கான பதில் இந்த மக்களின் தேர்தல் விஞ்ஞாபனம்.
ஒரு ரயில்பாதையின், சமாந்தரமாகப் பயணிக்கும் இரண்டு தடங்களைப் போலவே, இந்த மண்ணுக்கான உண்மையான மாற்றம் இரண்டு தடங்களில் நகர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்:
எங்களின் காலத்திற்கான அரசியல் எப்படியிருக்கவேண்டும் என்பதை நாம் வரையறுக்க விரும்புவதிலிருந்து பிறக்கிறது இந்த ஆவணம். தமிழ்பேசும் மக்களின் அரசியல் வழித்தடத்தை வலுப்பெறச் செய்யும் அர்ப்பணிப்பிலிருந்து பிறக்கிறது இந்த ஆவணம். எமக்கான அரசியலை ஒன்றாய் சேர்ந்து கனவு காண்போம். அக்கனவை நனவாக்க ஒன்றாய்க் கற்போம், ஒன்றாய் உழைப்போம். மக்களாய், மக்களுக்காய் வெல்வோம்!
திருகோணமலை என்பது இலங்கையில் இருக்கும் இன்னொரு நகரமல்ல – இது உலகின் மிகச்சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது, பல்லுயிர் நிறைந்த கடற்கரையைக் கொண்டுள்ளது, மேலும் பிராந்திய புவிசார் அரசியலின் மையத்தில் இலங்கையை வைக்கும் ஒரு நகரம். எண்ணற்ற இயற்கையான வாய்ப்புக்கள் கொட்டிக்கிடந்தபோதும், திருகோணமலை மக்கள் இந்த மூலோபாய மதிப்பின் பலன்களை அரிதாகவே அறுவடை செய்துள்ளனர்.
திருகோணமலை இன்னும் இராணுவமயமாக்கலின் நிழலில்தான் வாழ்கிறது. நில ஆக்கிரமிக்கரமிப்பு நின்றபாடில்லை. “போருக்குப் பிந்தைய வளர்ச்சி” பெரும்பாலும் சாதாரண மக்களின் தேவைகளைப் புறக்கணிக்கும், மேலிருந்து கீழ் திணிக்கப்படும் வெறும் கட்டடம் கட்டும் வளர்ச்சியாகவே உள்ளது.
மாநகராட்சி எல்லைக்குள், பல வட்டாரங்கள் உடைந்த சாலைகள், மோசமான வடிகால், சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வாழத் தகுதியான வீடுகள் மக்களின் வருமானத்திற்கு கட்டுப்படியாகாத நிலையை எட்டியுள்ளமை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றன. திருகோணமலை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட போதிலும், அபிவிருத்திக்கான முயற்சிகள் இன்னும் மக்களை – குறிப்பாக நகர்ப்புற ஏழைகள், மீன்பிடி சமூகங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களை – சென்றடையவில்லை.
திருகோணமலை இளைஞர்கள் படைப்பாற்றல், திறன் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் – ஆனால் வாய்ப்புக்களின் பன்முகத்தன்மையின் காரணமாகபாரிய சவால்களை எதிர்கொள்கின்றனர். உள்ளூர் பொருளாதாரம் சில துறைகளுக்குள் சிக்கி ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுழல்கிறது. பெரும்பாலும் உடல் உழைப்பு, குறைந்த ஊதியம் அல்லது காலாவதியாகும் நிலையில் உள்ள தொழில்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, புதிய தலைமுறை ஒன்றிற்கான வேலைவாய்ப்பில் பாரிய சிக்கல் உருவாகிறது. திறமை இல்லாததால் அல்ல, ஆனால் பிராந்தியத்தில் அவர்களின் திறனை உள்வாங்கக்கூடிய துறைகள் இல்லாததால் இந்த சிக்கல் உருவாகிறது. நவீன மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார முன்னெடுப்புக்கள் இல்லாததால் பல இளைஞர்கள் இடம்பெயரவும், புலம்பெயரவும் வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, இது உள்ளூர் திறமைகள் குறைந்து இளைஞர்களுக்கும் அவர்களின் சொந்த ஊருக்கும் இடையே ஆழமான துண்டிப்பை ஏற்படுத்துகிறது.
திருகோணமலையின் நில வளம் முதல் நீண்டு செல்கிற கடற்கரைகள் வரை, திருகோணமலை ஒரு வளமான ஆனால் சரியாகப் பேணாவிடில் இலகுவில் அழிந்துவிடக் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. திட்டமிடப்படாத உட்பட்டமைப்பு, சுற்றுலா விரிவாக்கம் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவை பல்லுயிர்க் கோலத்தையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்தும் நிலை உருவாகிக் கொண்டேயிருக்கிறது.
பல தசாப்தங்களாக ஓரங்கட்டப்பட்ட போதிலும், திருகோணமலை அபரிமிதமான ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நீதி மதிப்பு, மக்களின் பங்கேற்பின் முக்கியத்துவம், தொலைநோக்குப் பார்வையின் அவசியம் போன்றவற்றை உணரும் ஒரு நிர்வாக தத்துவத்தால் நிர்வகிக்கப்பட்டால்: