ஊடக சுதந்திரம் : ஜனநாயகத்தின் தூண்

வைத்தியர் சி. ஹயக்கிரிவன் (ஊடகவியலாளர்)

ஊடக சுதந்திரம் என்பது எந்த ஒரு ஜனநாயக நாட்டின் முக்கியமான மூலக் கல்லாகவும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவும் கருதப்படுகிறது. மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்கும் ஊடகம் முக்கியக் கருவியாக விளங்குகிறது. “அழுத்த குழு” என்ற அடிப்படைக்குள்ளும் இதனை உள்ளடக்க முடிகின்றது.

இலங்கையில் ஊடக சுதந்திரம் பற்றிய விவாதங்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. இனப்பிரச்சினைகள், அரசியல் கட்டுப்பாடுகள், சட்டப்புறக்கணிப்புகள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் போன்ற பல்வேறு காரணிகளால் நாட்டில் உண்மையான ஊடக சுதந்திரம் எவ்வளவு இருக்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இலங்கையின் இன ரீதியான பாகுபாடு, ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் இடையிலும் பார்க்கப்படும் துர்ப்பாக்கிய நிலைமை இன்றும் நிலவுகின்றது.

இலங்கையில் ஊடகத்துறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது பிரிட்டிஷ் காலத்தில் ஆரம்பித்ததாகக் கூறலாம். 1834 ஆம் ஆண்டில் ‘The Observer’ பத்திரிகை உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்கள் நாட்டில் விரைவாக வளர்ந்தன. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் பலம் பெற்றன. 1970களில் இலங்கை அரசு ஊடகங்களை கட்டுப்படுத்த முற்பட்டது, குறிப்பாக அரசுக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்கள் அரசு சார்ந்த முக்கிய செய்திகளை மட்டுமே வெளியிடும் நிலை உருவானது. மேலும் கால ஓட்டத்தில் ஊடகங்கள் பல்வேறுபட்ட கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக் கொண்டன. உதாரணமாக, பண பலம் மிக்கவர்கள் ஊடகங்களை நடாத்துதல், கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களும் இலங்கையில் இன்று பரவலடைந்துள்ளது.

1980களில், சிறுபான்மையினருக்கெதிரான கொடூரமான சம்பவங்கள், உள்நாட்டுப் போர், அரசியல் கொலைகள் போன்ற விடயங்களை மக்கள் அறிந்துகொள்ள தனியார் ஊடகங்கள் முயற்சி செய்தபோதும், அதற்கு அரசால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 1990களில், தனியார் ஊடகங்கள் வலுவடைந்தன, ஆனால் அதேநேரத்தில் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்பட்ட சம்பவங்களும் அதிகரித்தன.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகள், கடத்தல்கள், கொலைகள் போன்றவை தொடர்ந்துகொண்டே உள்ளன. 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, ஊடக சுதந்திரம் மேம்படும் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பல சுயாதீன ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர், சிலர் நாடு கடத்தப்பட்டனர். மேலும், இன்றுவரை ஊடகவியலாளர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், வன்முறைகள் அரசு மற்றும் அரசு சாராத தரப்புகளால் தொடர்கின்றன.

அதேநேரத்தில், ஊடக சுதந்திரத்தை அழிக்க சட்டங்களை பயன்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பொய்யான தகவல்களை பரப்புதல் என்ற காரணத்தை முன்வைத்து சில ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசு நிர்வாக அமைப்புகளும், விசாரணை அமைப்புகளும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்வது ஒரு புதிய போக்காக மாறியுள்ளது.

இலங்கையில் ஊடகங்களை கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்கள் உள்ளன. பயங்கரவாத தடை சட்டம் (Prevention of Terrorism Act)யானது ஊடகவியலாளர்களைத் துன்புறுத்த ஒரு கருவியாகப் பயன்பட்டு வருகிறது. ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நோக்கில் அரச தரப்புகள் இதனை கையாளுகின்றது. 1973ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஒழுங்குமுறைச்சட்டம் (Sri Lanka Press Council Law, No. 5 of 1973) மூலம் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பத்திரிகை மன்றம் (Press Council) ஊடகங்கள் மீது ஒழுங்குமுறைகளை விதிக்கின்றது. ஒரு பத்திரிகை அல்லது பத்திரிகையாளர் பொய்யான அல்லது தீங்கிழைக்கும் தகவல்களை வெளியிட்டால், அவர்களுக்கு தண்டனைகள் விதிக்க இடமளிக்கின்றது.

2006ஆம் ஆண்டு அரசு தகவல்களை பாதுகாக்கும் அவசரச்சட்டம் (Official Secrets Act, No. 32 of 1955 – Amended in 2006) ஆனது அரசியல், பாதுகாப்பு, அரசாங்கத்தின் உள்துறை நடவடிக்கைகள் போன்ற முக்கியமான தகவல்களை வெளியிடுவதை கட்டுப்படுத்துகிறது. அரசுக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இது பயன்படுத்தப்படுகிறது.

கணினி மற்றும் இணையதள தொழில்நுட்பம் வளர்ச்சியடையத் தொடங்கிய பிறகு, மக்கள் அதிகமாக தகவல்களை பெற சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் பாரம்பரிய ஊடக நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் தனிப்பட்ட முறையில் தகவல்களை பரப்புபவர்களும் அதிகரித்தனர். ஆனால், இவை அரசியல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்தப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. சமீபத்திய இணைய ஊடக கட்டுப்பாட்டு முயற்சிகள் பலவும் இடம்பெற்றுள்ளன. 2021, 2022 காலப்பகுதிகளில் சமூக வலைத்தளங்களை தற்காலிகமாக முடக்குதல் (Facebook, WhatsApp, Twitter) இடம்பெற்றது, 2023யில் இணைய ஊடகங்களில் தவறான தகவல் பரப்பலை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் முன்மொழியப்பட்டது. 2024யில் தேசிய பாதுகாப்பு காரணமாக மீடியாக்களை கட்டுப்படுத்த புதிய சட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அரசாங்கம் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த பல்வேறு முறைகளை முயற்சிக்கின்றனர். சமீப காலங்களில் பல சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் தகவல்களைப் பெறுவதில் தடைக்குள்ளாகின்றனர்.

இலங்கையில் பல சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்கள் அரசு மற்றும் அரசுடன் தொடர்புடைய அமைப்புகளால் அச்சுறுத்தப்படும் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. லசந்த விக்ரமதுங்க அவர்கள் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டளர். அவர் 2009ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். ரிச்சர்ட் டி சொய்ஸாஅவர்கள் புகழ்பெற்ற ஊடகவியலாளர் 1990ம் ஆண்டு கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்கள் திருகோணமலையில் இடம்பெற்ற ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை வெளிப்படுத்தியமைக்காக 2006யில் படுகொலை செய்யப்பட்டார். உதயன் பத்திரிகை அலுவலகம் 2006ம் ஆண்டு எரிக்கப்பட்டது. இரண்டு ஊழியர்களும் கொல்லப்பட்டனர். இவ்வாறான விடயங்கள் இன்றும் தொடர்வது அபத்தமானது.

ஊடக சுதந்திரத்தை மேம்படுத்த வேண்டிய தேவைகள் இன்று காணப்படுகின்றன. சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கல், ஊடகவியலாளர்கள் அச்சமின்றி தங்கள் பணியை மேற்கொள்ள அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்ட சீர்திருத்தங்கள் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கடுமையான சட்டங்கள் நீக்கப்பட்டு, புதிய ஜனநாயக சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
சமூக ஊடக கட்டுப்பாடுகளை நீக்குதல் மூலம் மக்கள் சுதந்திரமாக கருத்துக்களை பகிரும் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
உலகளாவிய ஆதரவு மூலம் சர்வதேச ஊடக அமைப்புகள் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.

இலங்கையில் ஊடக சுதந்திரம் முற்றிலும் அழிந்துவிட்டதா? இல்லை. ஆனால், இது மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உண்மையான ஜனநாயக நாட்டாக உருவாக, ஊடக சுதந்திரம் முக்கியமானது. ஊடகங்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறைக்கப்படாவிட்டால், நாட்டில் மக்களின் தகவல் அறியும் உரிமை தொடர்ந்து பாதிக்கப்படும். எனவே, இலங்கையில் உண்மையான ஊடக சுதந்திரம் ஏற்பட, அரசு, மக்கள், சர்வதேச சமூகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.