Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆங்கில மூலம்: அமாலி வெதகெதர ( Budget 2025: Adjusting and adapting inside IMF prison )
தமிழில்: அனோஜன் ஸ்ரெலாராணி திருக்கேதீஸ்வரநாதன்
கடன்காரர்கள் கட்டிய சிறைக்குள் வாழ்க்கையை நடத்துவதில் கடன்பட்டவர்களுக்கு உள்ள சிரமத்தை சொல்லும் ஒரு கதை போலுள்ளது 2025ம் ஆண்டிற்கான பாதீடு. 2025 இன் அரச செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமுன்வரைவு, சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிதிசார் நெருக்குவாரங்களையும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதில் இருக்கும் இடர்பாடுகளையும் ஒருசேர படம்பிடித்துக் காட்டுகிறது. “பொருளாதார உறுதிப்பாட்டை கட்டிக்காத்தலும் கடன் மீள்செலுத்தலுக்கான நிலைபேற்றுத்தன்மையை மீட்டெடுப்பதும் இலங்கையின் பொருளாதாரத்தைச் செழிப்படையச் செய்ய முக்கியமாகிறது” எனச் சொன்ன சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வு அறிக்கையின் வார்த்தை விளையாட்டுக்களில் இருந்த மட்டுப்பாடுகளையும் இந்தப் பாதீடு அம்பலப்படுத்துகிறது.
பொருளாதாரத்தின் அடிப்பட்டைக் கட்டுமானங்களை மேம்படுத்தவும், தொழில்துறைகளை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பை சீர்செய்தலையும், திறன்களை வளர்த்தல் அல்லது தொழில்நுட்பத்தை தரமுயர்த்தவும் அரசாங்கத்தின் கைகளுக்கு வலுச்சேர்ப்பதற்குப் பதிலாக, சுற்றுலாத் துறை போன்ற எளிதில் வீழ்ச்சியடையக்கூடிய துறைகளை நோக்கிய குறுகிய பார்வையுடைய திட்டமிடலாகவும் செயற்பாடாகவுமே சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல்கள் இருக்கிறது. நிதி ஒதுக்கீட்டு சட்டமுன்வரைவு மற்றும் அதைத் தொடர்ந்து வரவிருக்கும் பாதீடு ஆகியவை, சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் தீங்குகளின் குறிகாட்டிகளாகும். எவ்வளவு வேகமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறோமோ அதுவே இலங்கைக்கு நல்லது.
கடன்காரர்களின் சிறை – முதலீட்டுக்கு முட்டுக்கட்டையிடல்
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்களின்படி, NPP அரசாங்கம் 2025 ஆம் ஆண்டில் 2.3% முதன்மை கணக்கு இருப்பை பூர்த்தி செய்ய அல்லாடுகிறது. 2024 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11% ஆக இருந்த அரசாங்கத்தின் வருவாயை, இந்தவருடம் 15.1% ஆக அதிகரிப்பதன் மூலம் பாதீட்டில் உபரியீட்டச் செய்வதற்கான ஒரு முயற்சியாகும். இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீள் செலுத்துகைக்கான நிலைபேற்றுத்தன்மை பற்றிய வழிகாட்டுதல்கள் அரசாங்க வருவாயில் ஏற்படும் மேம்பாடுகள், நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கோ பொருளாதார மீட்சிக்கோ பயன்படுத்தப்படாது, மாறாக கடன் மீளச் செலுத்தலுக்கு பயன்படுத்தப்படும் என்பதை உறுதி செய்கின்றன. அதன்படி, சர்வதேச நாணய நிதியம் வரையறை செய்யும் கடன் மீள் செலுத்துதல் சார் இலக்குகள், கடன் வழங்கிய தரப்புகளின் நலன்களையும் நிலைபேற்றையுமே உறுதி செய்கின்றன.
அரசாங்கம், செலவினங்களை ரூ. 4,290 பில்லியனாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இதில் கடன்களுக்கான வட்டி சுமார் ரூ. 3,000 பில்லியனாக இருக்கும். மத்திய வங்கி ஆளுநரின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கை 4 முதல் 5 பில்லியன் டொலர் வரை கடனைச் செலுத்த வேண்டும். இதன் விளைவாக, அரசாங்க வருவாயில் கடன் மீள் செலுத்தலுக்காக ஒதுக்கப்படும் பங்கானது, சமூகப் பாதுகாப்பு, பொது சேவைகள் மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்திற்காக செய்யப்படும் முதலீடுகள் போன்ற செலவுகளை விட அதிகமாகும். 2024 ஆம் ஆண்டில் கடன் மீளச் செலுத்துவது பற்றி 145 நாடுகளை முன்வைத்து செய்யப்பட்ட ஒரு ஆய்வு, உலகில் வருவாய்க்கும் கடன் மீள் செலுத்தலுக்கு செலவிடும் தொகைக்குமிடையிலான விகிதத்தின் அடிப்படையில் நாடுகளைப் பட்டியலிட்டவிடத்து இலங்கை 2வது இடத்தைப் பிடித்தது. (Resolving the Worst Ever Global Debt Crisis: Time for a Nordic Initiative? 2024)
இலங்கையின் அரசாங்க வருவாயோடு ஒப்பிடுகையில் கடனுக்காக மீள் செலுத்தபடும் தொகை 202% ஆகும். இது ஒன்றும் இலங்கைக்குப் புதியதல்ல. நிக்கோலஸ் மற்றும் நிக்கோலஸ் (2024) கருத்துப்படி, அரசாங்கத்தின் மொத்த செலவினங்களுக்கும் பெறப்பட்ட கடன்களுக்காக செலுத்தப்படும் வட்டிக்கும் இடையிலான விகிதம் 1990 முதல் அதிகரித்து வந்திருக்கிறது. பாதீட்டுப் பற்றாக்குறையை அதிகரிப்பதில் அதிக வட்டி செலுத்துதல் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கை போன்ற நாடுகள், சர்வதேச நாணய நிதியத்தினால் வரைந்துகொடுக்கப்பட்ட சட்டகத்தின்படி கடன்களை மீளச் செலுத்துகின்றன, மீண்டும் நிதி பற்றாக்குறை ஏற்படும்போது திறந்த நிதிச் சந்தைக்குத் திரும்பி கடன் பெறுகின்றன. திறந்த சந்தைக் கடன்கள் அதிக வட்டி விகிதங்களில் வழங்கப்படுகின்றன – சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் (ISBs) மூலமாகக் கடன்பெறுவது இலங்கைக்குப் புதிதல்ல. இலங்கையின் கடன் நெருக்கடியின் மையமாக சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் உள்ளன என்றே சொல்லவேண்டும்.
வழக்கமான கசப்பு மருந்தா?
வழக்கமான போக்கிலிருந்து விலகி, 2025 இற்கான பாதீடு சாதாரண மக்களுக்கு கசப்பான மாத்திரைகளையோ அல்லது இறுக்கமான இடுப்புப் பட்டிகளையோ பரிந்துரைக்கவில்லை. கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட பல பாதீடுகளுக்கு மாறாக, சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்வளம், கிராமப்புற மேம்பாடு மற்றும் தோட்டங்களுக்கான அரசாங்க செலவு அதிகரித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சிற்குப் அடுத்ததாக அதிகபட்ச ஒதுக்கீட்டை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு பெற்றுள்ளது. 2024 இற்கான பாதீட்டுடன் ஒப்பிடும்போது, ரூ. 73 பில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி அதிகரிப்பு எவ்வாறு பொது சுகாதார சேவைகளின் உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதை நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வரைவு குறிப்பிடவில்லை என்றாலும், சிறந்த சேவைகளை வழங்குவதற்கான, சேவைகளை மேம்படுத்துவதற்கான திசையை இது குறிக்கிறது.
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்டிருக்கும் அதிகரிப்பு, கல்வி அமைச்சு, தேர்வுத் துறைகள், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு ஆகியவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு மாறாமல் உள்ளதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இது மீண்டெழும் செலவீனங்களுக்கும் மூலதனச் செலவினங்களுக்கும் இடையே ஒரு அனுசரிப்பு இருப்பதைக் குறிகாட்டுகிறது.
கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ. 30 பில்லியன் இங்கு கவனிக்கத்தக்கது. கடந்த காலங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருந்த செயற்பாடுகள், NPP அரசாங்கத்தின் கீழ் இரண்டு தனி அமைச்சுக்களாகப் பிரிக்கப்பட்டன. 1980களிலும் 1990களிலும் அரசு எந்திரத்தை பெரிதும் உள்ளடக்கியதாகக் காணப்பட்ட, கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக வலுவூட்டுகை சார் பிரச்சினைகள், படிப்படியாக அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களுக்கு புறத்திறனீட்டம் (outsource) செய்யப்பட்டது. இவ்விடயங்களிற்கான பொறுப்புக்களிலிருந்து அரசாங்கம் மெல்ல ஒதுங்கிக்கொண்டது. இதன் விளைவாக பாரிய நுண்கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரத்தம் உறிஞ்சும் அட்டையின் செயற்பாட்டை ஒத்த உழைக்கும் மக்களிடமிருந்து செல்வத்தை மிகையாக உறிஞ்சும் செய்ற்பாடுகள் நுண்நிதி நிறுவனங்களால் நிகழ்த்தப்படுவதும் குறைந்த வருமானம் கொண்ட பெண்களிடையே கடன் பெருக்கம் ஏற்பட்டிருப்பதும் இந்த நுண்கடன் நெருக்கடியின் முக்கியமான அம்சங்கள். நுண்கடனால் வங்குரோத்தாகி வளர்ச்சியடையாத நிலையில் இருக்கும் கிராமங்கள் மீள்வதற்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. கிராம மறுமலர்ச்சியிலும் நுண்கடன் நெருக்கடியைத் தீர்ப்பதிலும் புதிய அமைச்சின் வகிபாகம் மிக முக்கியமானதாக இருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.
பழைய பாதையா அல்லது விவசாய நவீனமயப்படுத்தலும் உணவுப் பாதுகாப்புமா?
புதிய அமைச்சரவைக்கு அமைய ஒன்றிணைக்கப்பட்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, நிதி ஒதுக்கீட்டுப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில், கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சுக்களுக்கு ஒருங்கே ரூ. 193 பில்லியனை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதோடு ஒப்பிடுகையில் இந்த முறை ரூ. 15.7 பில்லியன் அதிகரிப்புக் காணப்படுகிறது. வெவ்வேறு அமைச்சுக்களுக்கு கிடைத்திருக்கும் ஒதுக்கீட்டு அதிகரிப்பான ரூ. 100 பில்லியனுக்கும் அதிகமான தொகையோடு ஒப்பிடும் போது இது பெரிதாகத் தெரியாத போதும், தற்போதைய அமைச்சின் கட்டமைவில் இருக்கும் ஒருங்கிணைந்த, நெறிப்படுத்தப்பட்ட முறைமை, நிதியை திறமையாகவும் செயற்திறனாகவும் பயன்படுத்த வழிவகுக்கும். தனி ஒரு திணைக்களத்துக்கான ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், மூலதனச் செலவின ஒதுக்கீடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட நிதியின் தாக்கத்தை, மக்களுக்குத் தேவையான உணவை இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கான சிறு விவசாயிகளின் திறன்களை எப்படி மீட்டெடுக்கும் என்பதைப் பொறுத்தே கணிப்பிடமுடியும். மத்திய வங்கியின் மாதாந்த வர்த்தக அறிக்கையின்படி, 2024 ஜனவரி மற்றும் நவம்பரிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில், காய்கறிகளை இறக்குமதி செய்வதற்காக இலங்கை, 397.4 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. உள்நாட்டு உணவுத் தேவைகளுக்கான இறக்குமதியைச் சார்ந்திருப்பது தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது அந்நியச் செலாவணியைக் கசியவிடும் செயற்பாடு மட்டுமல்லாமல், அது நாட்டை இலகுவில் கையறுநிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு மூலமாகவும் உள்ளது. COVID-19 நோய்த்தொற்றுக் காலத்தில் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட முறிவு, உணவு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு மற்றும் உக்ரைன் போரின் பின்னணியில் உணவு, தானியங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகியவை உள்நாட்டு உணவுத் தேவைகளுக்கு இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஏற்றுமதிக்கான விவசாய உற்பத்தியை ஊக்குவிப்பது அந்நியச் செலாவணி உருவாக்கம் என்கிற கோணத்தில் கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்க உள்நாட்டின் உணவு இறையாண்மையை உறுதி செய்வது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதார மேம்பாடுகள் ஆகிய கோணங்களில் நாட்டின் வளர்ச்சியோடு பிணைந்துள்ளது.
உலக உணவுத் திட்டம் முன்வைத்திருக்கும், குடும்பங்களுக்கான உணவுப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், 2023இல், இலங்கையில் 24% குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு மத்தியிலும் பெருந்தோட்டத் துறையிலும் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த சம்பவங்கள் அதிகமாகக் பதிவாகியிருக்கின்றன. அதே அறிக்கையின்படி, விவசாயிகள், முற்றிலும் சந்தையை நோக்காகக் கொண்ட உற்பத்திப் போக்கிலிருந்து விலகி தமது உற்பத்தியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தமது குடும்பத் தேவைகளில் ஏற்படும் தட்டுப்பாடுகளைப் போக்கும் பொருட்டான உணவுகளை உற்பத்தி செய்யும், உணவை நோக்காகக் கொண்ட விவசாயத்தை நோக்கியும் மாற்றி வருவதைச் சுட்டுகிறது. இத்தகைய போக்குகளைக் கண்டறிந்து, அத்தகைய அடிமட்ட முயற்சிகளை ஆதரிப்பதும் அரசின் பொறுப்பாகும்.
பாதுகாப்பு ஈன்றெடுக்கும் பாதுகாப்பின்மை
இலங்கை வரலாற்றின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியோ அல்லது அதிலிருந்து மீள்வதற்கான முன்னெடுப்புகளோ கூட பாதுகாப்பு அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டங்களிலோ அல்லது பொதுப் பாதுகாப்புத் துறையிலோ சிக்கன நடவடிக்கைகளை முன்வைக்கவில்லை. இரண்டு அமைச்சுக்களுக்குமான நிதி ஒதுக்கீடு 2024 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டை விட அதிகரித்துள்ளது. பாதுகாப்புக்கான ஒதுக்கீடு ரூ. 19 பில்லியன் அதிகரித்துள்ள நிலையில், பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 35 பில்லியன் அதிகரித்துள்ளது. இதில் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரிய பங்கு ஒதுக்கபட்ட நிலையில், பாதுகாப்பு ஒதுக்கீட்டில், இராணுவம் மிகப்பெரிய பங்கைப் பெற்றுள்ளது. 2024 உடன் ஒப்பிடும்போது நிகர ஒதுக்கீட்டின் பங்காகப் பாதுகாப்பு அமைச்சிற்கான ஒதுக்கீட்டை பார்க்கும் போது முக்கியத்துவம் சற்றுக் குறைந்ததாக தோன்றினாலும், அவை பொதுத்துறையின் வீங்கிய துறைகளாகவே தொடர்கின்றன.
சுவாரசியமான விடயம் என்னவென்றால், ஊதிய முடக்கம் அல்லது தொழிலாளர் குறைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பொதுத்துறை சீர்திருத்தங்களை ஆதரிக்கும் தாராளவாதிகள் கூட, மற்றத் துறைகளில் விவாதிக்கும், செயல்திறனை அதிகரித்தல், திறைசேரியின் மீதான சுமையைக் குறைத்தல் போன்ற விவாதங்களையும் வீணான செலவுகள், ஊதிய சட்டமூலங்கள், உற்பத்தி நோக்கில் பயனில்லாத முதலீடுகள் என்பவை பற்றியும், பாதுகாப்புத் துறை சார்ந்து விவாதிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். ஆயுதப்படைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், படைப்பிரிவுகளைக் கலைத்தல் அல்லது பாதுகாப்புத் துறையில் சிக்கனத்தை முன்னிறுத்தும் சீர்திருத்தங்கள் எவற்றையும் அவர்கள் பரிந்துரைக்கவில்லை. வீங்கிப் போயிருக்கும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு ஒரு பெரும் சுமையாகும். இது தொழில்கள், உற்பத்தி, விவசாயம் மற்றும் மீன்வளம் போன்ற பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தக்கூடிய துறைகளுக்குப் போகவேண்டிய முதலீடுகளை தன்னை நோக்கித் திசைதிருப்புகிறது. மேலும், இது சமூகப் பாதுகாப்புக்கான ஒதுக்கீடுகளையும் குறைக்கிறது, இது வேறுவகையில் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துகிறது. பொருளாதாரத்தை மீள நிலைநிறுத்தும் முயற்சியின் பேரும் சுமையை பொதுமக்களே சுமக்கவேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக உழைக்கும் மக்கள். அதிகரித்த வரிகள், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிகழும் வெட்டுக்கள் என்பதாக அந்த சுமைகள் அமைகின்றன.
விவசாயம், சுற்றுலா எனத் தனக்கு தொடர்பில்லாத துறைகளை நோக்கி இராணுவம் பன்முகப்படுத்தப்படுவது கூட சமமற்ற தன்மைகளை உருவாக்கியுள்ளது. இது விவசாயம் மற்றும் சுற்றுலாவை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. நிலையான ஊதியம் மற்றும் வேலைப் பாதுகாப்புடன் கூடிய பாதுகாப்புப் படைகள், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்கியுள்ளன. அரகலயவைச் சுற்றி நடந்த போராட்ட முன்னெடுப்புக்கள் மற்றும் ரத்துபஸ்வல சம்பவம் போன்றவை, தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறுதரப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் போது பாதுகாப்புப் படைகள் நீதியைக் காப்பதை விட நாட்டின் அதிகாரக் கட்டமைப்பைக் காப்பதற்கே முன்னுரிமை அளிக்கின்றன என்பதைக் வெளிக்காட்டுகின்றன. அடித்தட்டு மக்களின் உழைப்புப் பிழியப்பதுவதன் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியைச், செலவிடுவதற்கான திட்டமிடலின் போது, அதில் கணிசமான பகுதியை பாதுகாப்புக்கான செலவுகள் என்கிற பெயரில் ஒதுக்குவதற்கான உரிய நியாயப்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
போரின் நிமித்தம் பெரும் பொருட்செலவில், பெரும் ஆட்பலத்தொடு கட்டமைக்கப்பட்ட இராணுவத்தைப் போர் முடிவடைந்த பின்னர் எந்த வகையில் சமநிலைக்கு கொண்டுவருவது என்பது குறித்த கலந்துரையாடல்கள் எந்த அரசாங்கத்தாலும் பெருமளவில் முன்னெடுக்கப்படவில்லை. போருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும், இராணுவத்தை, பெரும் ஆட்பலத்துடன் தக்கவைத்துக்கொள்வதன் மூலம், தமது சொந்த பாதுகாப்பையும் நலன்களையும் உறுதிசெய்து கொண்டன. மக்கள் இராணுவமயமாக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் செல்ல விரும்புவதால், இராணுவத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவும் அவர்களை சாதாரண வாழ்க்கைக்கு திருப்பும் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டிய நேரம் இது.
பலவீனமான முதுகெலும்பு
சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் நிதி அழுத்தத்தின் பெயரில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் பலியிடப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று அமைச்சுக்களுக்கும் சேர்த்து ரூ. 20.9 பில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது ரூ. 4.3 பில்லியன், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு அதிகரிப்பு ரூ. 0.2 பில்லியன். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கான ஒதுக்கீட்டு அதிகரிப்பு ரூ. 0.4 பில்லியன் என்றவாறே காணப்படுகிறது. பொருளாதார மீட்சி, சந்தைக் கட்டுப்பாட்டை மீட்டெடுத்தல், மதிப்புக் கூட்டல் செயற்பாடுகளை உந்தித்தள்ளுதல், தொழிற்துறைகளில் புத்தாக்க முயற்சிகளை உட்புகுத்தல், தொழில்மயப்படுத்தலுக்கான பாதையில் நாட்டைக் கொண்டு நடத்துதல் போன்ற உறுதியான அடித்தளத்தை அமைத்திருக்கக்கூடிய மூன்று அமைச்சுக்கள் அவற்றைச் சரிவரச் செய்யத் தேவையான நிதியைப் பெறவில்லை.
2025 இற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமுன்வரைவு காட்டும் சமிஞ்சைகளை வைத்துப் பார்க்கின்றபோது பொருளாதாரம் பயணிக்க இருக்கும் பாதை ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கப்போகிறது. உற்பத்தித் துறையைக் காட்டிலும் சுற்றுலாத் துறையையும் சேவைத் துறைகளையும் நம்பியிருந்த பழைய பாதையைப் போலவே தெரிகிறது. குறைந்தபட்ச ஏற்றுமதி, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் ஆகியவற்றை அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான பிரதான மார்க்கமாகக் கொண்டிருப்பதன் அபாயத்தை, கடந்த காலங்களில் இலங்கை பல தடவைகள் அனுபவித்திருக்கிறது. ஏதோ ஒரு நாட்டின் அரசினாலோ அல்லது தூதுவராலயம் வெளியிடக்கூடிய சாதாரண பயண ஆலோசனையே, இலங்கையின் சுற்றுலாத்துறையை வீழ்ச்சியடையச் செய்ய வல்லது. ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் COVID-19 பெருந்தொற்று ஆகியவை பொருளாதாரத்தின் பலவீனமான கட்டமைப்புகளிலிருந்து தங்கியிருப்பதில் இருக்கும் பாதிப்புகளைப் படம்போட்டுக்கு காட்டின. சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பில் எழுந்து நிற்கும் இந்தக் கடன்காரர்களின் சிறை, பொருந்திப்போதலையும் அனுசரித்தலையும் மட்டுமே அனுமதிக்கிறதே தவிர அடைப்படை மாற்றத்தையோ சுதந்திரத்தையோ அல்ல.
வலுவான வளமான பொருளாதாரம் உருவாகவேண்டும் என்கிற மக்களது கனவின் நிறைவேற்றம் வலுவான பொருளாதார கட்டுமானங்களை உருவாக்குவதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் சிறையில் இருந்து விடுபடுவதிலுமே சார்ந்திருக்கிறது.