Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
–ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன்
இப்போது காசா மீதான ஊடக வெளிச்சம் குறைந்துள்ளது. இஸ்ரேஸ் தாக்குதலுக்கு உள்ளாகும்போது சர்வதேச ஊடகப் பரப்பில் கவனம்பெறுகிற பலஸ்தீன-இஸ்ரேஸ் முரண்பாடு, பலஸ்தீனத்தின் மீது வன்முறை ஏவப்படும்போது ஒரு சிறிய பெட்டிச் செய்தியாகக் கடந்து போகிறது. 2009இல் ஈழத்தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை, அதை எல்லோரும் கண்டிக்க வேண்டும் என்று கோருவோர், கடந்த ஓராண்டுக்கு மேலாக காசாவின் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறையைக் கண்டும் காணாதிருந்தனர். இன்னும் சிலர் ஈழத்தமிழரை யூதருடன் ஒப்பிடுவர். யூதருக்கு ஒரு நாடு கிடைத்தது போல தமிழீழத்தை சர்வதேசம் பெற்றுத்தரும் என்று நம்புவோர் இன்றும் எம்மத்தியில் உண்டு. இந்த அபத்தங்களையும் கடந்தே நாம் பலஸ்தீன-இஸ்ரேல் முரண்பாட்டை விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பான விளக்கங்கள், வியாக்கியானங்கள், வாதங்கள் என்பவற்றை முன்வைப்பதற்கு முன்னர் இதன் வரவால்றைச் சரிவர விளங்கியாக வேண்டும்.
நிலம் உண்மையில் கொலனியாதிக்கத்தில் இருந்து விடுபடவில்லை. அடுத்தடுத்து வந்த பேரரசுகளின் கட்டுப்பாட்டின் அடிப்படையில் அல்லது மதக் கற்பனைகளுடனான அதன் தொடர்பு அல்லது அவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல் வடிவமைப்புகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக அது ஆதிக்கத்துக்குட்பட்டதாக இருந்தது. அதன் தற்போதைய விதி, “நாடுகளாக” பிரிக்கப்பட்ட ஒரு பகுதி மற்றும் இஸ்ரேலால் கொலனித்துவப்படுத்தப்பட்ட பாலஸ்தீனம்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் மூன்று முறை இந்த வரலாற்றை விளங்கிக் கொள்வதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த பிரச்சனையின் அடியாளத்தை விளங்கிக் கொள்வதற்காக ஏராளமான நூல்களைத் தேடி வாசித்தேன். அதில் பெரும்பாலானவை இஸ்ரேஸ் சார்பு நூல்களாகவோ அல்லது யூத அனுதாப வரலாறுகளாகவோ இருந்தன. எட்வர்ட் சயித் போன்றோரின் நூல்கள் பலஸ்தீனர்களின் பார்வையில் வரலாற்றைத் தர முயன்றாலும் அது முழுமையானதல்ல என்பதை உணர முடிந்தது. இற்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், ஆய்வு மாநாடு ஒன்றுக்கான ஜெரூசலப் பல்கலைக்கழகத்தின் அழைப்பில் பேரில் அங்கு செல்லக் கிடைத்தது. இருவாரப் பயணத்தில் இஸ்ரேலியர்கள், பலஸ்தீனியர்கள், அங்கு வாழ்வோர் எனப் பலருடன் உரையாடக் கிடைத்தது. இருந்தபோதும் முழுமையான வரலாறு என்பது இன்னமும் எழுதப்படவில்லை என்பதை அதற்கான காரணங்களோடு பலர் எடுத்துரைத்தார்கள். அதேபோல 2023 ஓக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலையடுத்து பலஸ்தீன-இஸ்ரேஸ் வரலாறு பேசுபொருளானது. அதைத் தொடர்ந்தும் முழுமையான வரலாற்றை அறிய இன்னொருமுறை முயற்சி எடுத்தேன். இவை சில முக்கிய பாடங்களை எனக்குத் தந்தன. அவற்றிலிருந்து இந்தத் தொடரைத் தொடங்குவது பொருத்தம்.
பலஸ்தீனம், அதன் நிலம், மக்கள் மற்றும் அதன் பண்பாடுகள் பற்றிய முழுமையான வரலாறு இன்னும் எழுதப்படவில்லை. அண்மைக்கால நிகழ்வுகளின் கதை விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ஆனால் பண்டைய மற்றும் நவீன காலங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான பார்வை இன்னமும் வெளிப்படவில்லை. சுருக்கமாக, இந்த வகையான ஒரு விரிவான வரலாறு பல காரணிகளின் கலவையால் தடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று உண்மைகள் மற்றும் மதக் கதைகளுக்கு இடையிலான குழப்பம், பல நூற்றாண்டுகளாக மேற்குலகிலும் குறித்த பிராந்தியத்திலும் உள்ள மாறுபட்ட பொதுக் கருத்துக்கள், கடந்தகால தவறான எண்ணங்களை சுயநலத்துடன் நிலைநிறுத்துதல் மற்றும் இப்போது ஆய்வுப்புலத்தின் முரண்பாடான நிகழ்ச்சி நிரல் ஆகியன இதில் குறிப்பிடத்தக்கன.
நிலம் உண்மையில் கொலனியாதிக்கத்தில் இருந்து விடுபடவில்லை. அடுத்தடுத்து வந்த பேரரசுகளின் கட்டுப்பாட்டின் அடிப்படையில் அல்லது மதக் கற்பனைகளுடனான அதன் தொடர்பு அல்லது அவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல் வடிவமைப்புகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக அது ஆதிக்கத்துக்குட்பட்டதாக இருந்தது. அதன் தற்போதைய விதி, “நாடுகளாக” பிரிக்கப்பட்ட ஒரு பகுதி மற்றும் இஸ்ரேலால் கொலனித்துவப்படுத்தப்பட்ட பாலஸ்தீனம். இது பெரும்பாலும் கண்டுபிடிப்பு, தவறான கருத்து மற்றும் பிற்கால சதித்திட்டத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தவறான பண்டைய வரலாற்றின் விளைவாகும். கடந்த காலத்தைப் பற்றிய ஆழ்ந்த மௌனம் மற்றும் அறிவின் ஒடுக்கம் தொடர்ந்து தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக, உண்மையான கடந்த காலம் இன்னமும் வெளித்தெரியாமல் உள்ளது. அதை மீட்டெடுத்து வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகிறது. அது வெளிச்சம் போல நடிக்கும் இருளை அகற்ற விரும்புகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன என்பது கசப்பான உண்மை.
கடந்த 150 ஆண்டுகளில் மனதை மாற்றியமைக்கும் கண்டுபிடிப்புகள், முன்பு இருந்த உறுதிகளை சந்தேகத்திற்கு உள்ளாக்கி, அவை வரலாற்றுக்கு மாறானவை என்று காட்டியுள்ளன. இத்தகைய கண்டுபிடிப்புகள் பிராந்தியத்தைப் பற்றிய திருத்தப்பட்ட மற்றும் அதிக அறிவொளியான புரிதலுக்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஆனால் மத மற்றும் இப்போது அரசியல் முதலீடுகள் புராண அனுமானங்களுடன் மிகவும் சிக்கியுள்ளதால், பெருகிவரும் தொல்பொருள் மற்றும் கல்வெட்டு கண்டுபிடிப்புகளின் முழு தாக்கங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு பெரும் எதிர்ப்பு உள்ளது. அவை முக்கிய சிந்தனைக்கு சவால் விடுவதால், தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. இது குறித்த ஆய்வுத்துறையானது (மேற்கத்திய, இஸ்ரேலிய அல்லது பிராந்திய), அதை உருவாக்கும் மற்றும் நிலைநிறுத்தும் மேலாதிக்க அமைப்புகளின் ஒரு பகுதியாக இருப்பதால், பெரும்பாலும் உடந்தையாகவோ அல்லது வரையறுக்கப்பட்டதாகவோ உள்ளது. இது பொதுவாக பழைய கருத்துகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது அல்லது புதிய கண்டுபிடிப்புகளை முன்னமைக்கப்பட்ட அச்சுகளுக்குள் விளக்குகிறது, அதே நேரத்தில் புதிய மாற்று அணுகுமுறைகள் தாக்கப்படுகின்றன அல்லது புதைக்கப்படுகின்றன. அறிவார்ந்த மட்டத்திலோ அல்லது பொது மட்டத்திலோ, மக்கள் தங்களுக்குத் தெரிந்ததை நம்புவதற்கு அல்லது நினைப்பதற்கு வழிவகுத்ததில் “”கற்றுக்கொள்வதற்கு” நிறைய இருக்கிறது. மனப்பான்மையை மறுவடிவமைப்பது, நுண்ணறிவுகளை ஆழமாக்குவது மற்றும் மனித நனவில் ஊட்டமளிக்கும் வளர்ச்சிக்கான முதல் படியை மேற்கொள்வது இதற்கான முதற்படியாகும். முரண்பாட்டினால் கூர்மையடைந்த சமூகங்களில் உண்மையே முதற்பலி என்பது பலஸ்தீன-இஸ்ரேல் விடயத்தில் பொருந்திவருகிறது.
இப்பகுதியைக் குறிக்க நாம் இன்று “மத்திய கிழக்கு” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இந்தப் புவியியல் வரையறையானது கொலனித்துவச் சொல்லாடலாகும். சில கீழைத்தேய ஆய்வாளர்கள் இப்பகுதியை “கிழக்கு மத்தியதரைக் கடல்” என்று பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பண்பாட்டு அடிப்படையில் ஒற்றுமைகளைக் கொண்ட அரசியற் சொல்லாட்சியாக இதைக் கருதுகிறார்கள். இப்பகுதி இப்போது ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற இடங்களையும் உள்ளடக்கும். இது கிரீஸிலிருந்து, சிறிய ஆசியா (தற்போதைய துருக்கி) மற்றும் பெருஞ் சிரியா (இன்றைய சிரியா, லெபனான், ஜோர்டான் மற்றும் பலஸ்தீனம்) வழியாக கிழக்கிற்கு உள்நாட்டில் இன்றைய காலத்தை இணைக்கும் ஒரு வகையான கலாசார இணைப்பை உருவாக்கும் ஒரு பகுதியைக் குறிக்கிறது. இது ஈராக், மற்றும் தென்மேற்கே சினாய் பாலைவனம் வழியாக எகிப்துக்குள் ஓடுகிறது. இவ்வாய்வாளர்கள் கிழக்கு மத்தியதரைக் கடலைப் பல சமூக-கலாசார குறுக்குவெட்டுகளைக் கொண்ட ஒரு அலகாகக் கருதுகிறார்கள்.
இந்த பிராந்தியத்தில், பலஸ்தீனம் அனைத்தையும் இணைக்கும் ஒரு உண்மையான தரைப்பாலமாக நிற்கிறது. புனிதமான கட்டுமானங்கள், புனிதமற்ற நடைமுறைகள், கற்பனைகள், கட்டுக்கதைகள் என அனைத்தும் கலந்த கலவையாக, பொதுவாக “நாகரிகத்தின் தொட்டில்” என்று வர்ணிக்கப்படும் நிலப்பரப்பின் ஒரு பகுதியாக அது உள்ளது. இது பண்டைய காலங்களில் முக்கியமான கண்டுபிடிப்புகளுடன் தொடர்புடையது, இப்போது எது உண்மை எது பொய், என்பது பற்றிய பிரச்சனைகளிலும் நிச்சயமற்ற நிலைப்பாடுகளிலும் சிக்கித் தவிக்கிறது. இது தெளிவாக இன்று உலகில் உள்ள அனைவரையும் கவலை கொள்ள வேண்டிய முரண்பாடுகளின் ஒரு பகுதியாகும். முன்னெப்போதையும் விட, அப்பகுதியின் தலைவிதி மனிதம், அறம் மற்றும் நல்லறிவை பாதிக்கிறது. மேலும் பெறப்பட்ட முடிவுகளின் மறு கருத்தாக்கத்தை கோருகிறது. வரலாற்று அறிவை எவ்வாறு அணுகுவது எவ்வாறு நம்பிக்கைகளை விளங்கிக்கொள்வது, தவறுகளை எவ்வாறு அம்பலப்படுத்துவது மற்றும் தகவல்களை எவ்வாறு விசாரிப்பது அல்லது ஏற்றுக்கொள்வது போன்ற பதிலற்ற வினாக்களை எழுப்புகிறது. பலஸ்தீனம் மற்றும் அதன் பிராந்தியம் பற்றிய புதுப்பிக்கப்பட்ட மற்றும் விரிவான புரிதல் அனைத்து வகையான அறிவாற்றல் பிரச்சினைகளுக்கும் அவசரமாகத் தேவைப்படுகிறது. ஆனால் அது இப்போதைக்குச் சாத்தியமில்லை. இந்த மட்டுப்பாடுகளுடனேயே நாம் இந்த முரண்பாட்டை அணுக வேண்டியுள்ளது.